728x90 AdSpace

  • Latest News

    மலையகத்தில் தொழிற்சங்கங்கள் அரசியல் மயப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. அதுவே மலையக அரசியலின் வேராகும். - மேதின விழாவில் திலகர் எம்.பி

    மலையகத்தில் தொழிற்சங்கங்கள் அரசியல் மயப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. அதுவே மலையக அரசியலின் வேராகும்.
      - மேதின விழாவில் திலகர் எம்.பி 


    தொழிலாளர்களின் உரிமைக்கான தினமான மேதினம் உலகமெங்கும் அரசியல் மயப்பட்டுவிட்டதான ஒரு போக்கு உருவாகியுள்ளது. மலையகத்தில் தொழிற்சங்கங்கள் அரசியல்மயப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டுவோரும் உள்ளனர். ஆனால், இலங்கை நாடு சுதந்திரமடைந்தபோது குடியுரிமைப் பறிக்கப்பட்ட மலையக மக்கள் தங்களுக்கான அமைப்பாக்கமாக தொழிற்சங்கத்தையே நம்பியிருந்தனர். அந்த தொழிற்சங்கக் கட்டமைப்பே அதற்கு இன்றைய அரசியல் கட்சிகளின் ஆணிவேராக அமைந்துள்ளது. எனவே மலையகத்தில் தொழிற்சங்கங்கள் அரசியல் மயப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

    தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மேதினக்கூட்டம் தலவாக்கலை நகரசபை மைதானத்தில் இடம் பெற்றது. இந்த கூட்டத்தில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

    மலையகத்துக்கென தனியான தொழிற்சங்க அரசியல் கலாசாரம் ஒன்று இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், தமிழ் முற்போக்கு கூட்டணி அந்த அரசியல் கலாசாரத்தில் ஒரு மாற்றுச் செல்நெறிக்கு வழிவகுத்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. காலம் காலமாக அரசியல் ஆதிக்கம் செலுத்தி ஏதாவது அமைச்சுப்பதவியைப் பெற்றுக் கொண்டவர்கள் மத்தியில் எமது மக்களுக்குத் தேவையான அமைச்சுப்பதவிகள் வேண்டும் எனக்கேட்டுப் பெற்று சேவையாற்றி வருகிறோம். 

    கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சபைகளைக் கைப்பற்றிவிட்டதாக சிலர் சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் முற்போக்கு கூட்டணி வசம் சபை மலையகத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் தமிழ் முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் இல்லாத சபைகள் இல்லை என்பதை நினைவுப்படுத்துகின்றோம். மலையகத் தமிழன் ஆளுகின்ற பிரதேச சபைகளை உருவாக்கியது எமது கூட்டணி என்பதை யாரும் மறுக்கமுடியாது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றிப் பெற நாங்கள் பொய்ப்பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை. 

    எங்கள் வாக்குறுதிகளை எழுத்து மூலம் மக்களுக்கு சமர்பித்தோம். ஆனால், அன்று பொய்ப்பிரச்சாரங்கள்  மூலமாக வெற்றிபெற்றவர்கள் அந்த வெற்றியைக் காட்டி தங்களுக்கு அமைச்சுப் பதவியை வாங்கிக் கொண்டது மாத்திரத்திரம்தான் நடைபெற்றது. அமைச்சுப் பதவியை எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். ஆனால், பேர் தெரியாத பிரதி அமைச்சர் பதவியை வாங்கிக் கொள்கிறார்கள். அன்று எஸ்.பி திசாநாயக்கவை அழைத்துவந்து அமைச்சர் திகாம்பரத்தின் பதவியை பறிப்பதாபச் சொன்னார்கள். ஆனால், இன்றும் திகாம்பரம் அமைச்சராகத்தான் இருக்கிறார்.ஆனால், அமைச்சராக இருந்த எஸ்.பி திசாநாயக்கதான் அதனை இழந்து நிற்கிறார்.

    நாங்கள் அமைச்சுப்பதவிகளை இலக்கு வைத்து அரசியல் செய்பவர்கள் இல்லை. உரிமை எங்களுக்கு பிரதான இலக்கு. இன்று டீ.சேர்டுகளில் மாடு படத்தைப் போட்டுக் கொள்பவர்கள் அன்று அமைச்சுப் பதவியும் மாட்டுக்காகவே வாங்கிக் கொண்டார்கள். மாட்டு அமைச்சை மாத்திரம் வைத்து மேய்க்க எங்கள் மக்கள் ஒன்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாடுகள் இல்லை. நாங்கள் மக்கள். மலையகத் தமிழ் என அடையாளம் கொண்ட மக்கள்.

    எங்கள் இலக்குகள் மக்களின் முன்னேற்றமே. இலங்கை நாட்டில் நாகரிகமான சமூகமாக வாழ மாட்டு அமைச்சை மாத்திரமே கேட்டு வாங்காமல் அன்று சந்திரசேகரன் முதல் இன்று முற்போக்கு கூட்டணி வரை எங்கள் இலக்கு எங்கள் மக்களின் அவமான சின்னமான லயன் முறையை மாற்றியமைக்கும் தனிவீட்டுத்திட்டம். அவர்கள் உரிமையோடு நிற்க ஒரு துண்டு நிலம். அதற்கான காணி உறுதி. அப்படியான அமைச்சுப் பதவியைப் பெற்று மக்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். 


    நாங்கள் கூட்டணி ஆரம்பித்து மூன்றே ஆண்டுகளில் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மலையக மக்களுக்கான முதல் அரச அதிகாரங்களைக் கொண்ட மலைநாட்டு புதிய கிராமங்களுக்கான அதிகார சபையை வென்றெடுத்துள்ளோம். இதுவே, எமது மக்களுக்கு நாம் வழங்கும் தொழிலாளர் தின பரிசு. மலையக அரசியலுக்கு தங்கள் உதிர்த்த தொழிலாளர் தோழர்களுக்குச் செய்கின்ற காணிக்கை. தொழிற்சங்க கட்டமைப்பின் ஊடாக கட்டியெழுப்பிய அரசியலின் வெற்றி என்றும்  தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: மலையகத்தில் தொழிற்சங்கங்கள் அரசியல் மயப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. அதுவே மலையக அரசியலின் வேராகும். - மேதின விழாவில் திலகர் எம்.பி Rating: 5 Reviewed By: Tamilosai
    Scroll to Top